பல்லடம் பூமலுார் அருகே வடிவேல் பட பாணியில் நடுவுல கொஞ்சம் வாய்க்கால காணோம் மாதிரி காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலுாரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரி உரிமையாளர் பிரகாஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆசியாவின் பொறியியல் அதிசயம் என போற்றப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கிளை வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் இந்த கிளை வாய்க்காலை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வாய்க்காலை மீண்டும் சீரமைத்து கொடுத்தனர். மீண்டும் பிரகாஷ் பிஏபி கிளை வாய்க்காலை குவாரிக்காக சேதப்படுத்தியதால் 140 மீட்டர் துாரத்திற்கு வாய்க்கால் முழுவதுமாக காணமால் போனது.
விவசாயிகள் மீண்டும் மாவட்ட மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டதால் நேற்று முன்தினம் பல்லடம் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். எனவே பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஷியாமலா அளித்த புகாரில் குவாரி உரிமையாளர் மீது அரசு சொத்தை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் 138 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனம் வினாவாகியுள்ளது.
கனிமவள சட்ட விதிகளின்படி நீர் நிலைகளில் இருந்து 50 மீட்டர் துாரத்திற்கு அப்பால் குவாரிகள் அனுமதிக்கப்பட வேண்டும்என விதிகள் உள்ள நிலையில் பிரகாஷ் குவாரி விதிகளை மீறியதற்கும் ஆசியாவின் பொறியியல் அதிசயத்தை சேதப்படுத்தியதற்காகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணாமல் போன வாய்க்காலை தர வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
—-அனகா காளமேகன்








