ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக சார்பில் வைக்கப்பட்ட தொடர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்துள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஈரோடு தேர்தல் முறைகேடு தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தொடர்ந்திருந்த வழக்கு, கடந்த 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 238 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, 34 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அடையாளம் காணப்பட்டு சட்டவிரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், பூத் ஸ்லிப்கள் வினியோகிக்க, கட்சி ஏஜெண்ட்களுக்கு அனுமதியில்லை என்றும், தேர்தல் அலுவலர்கள் தான் வினியோகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவர் மற்றும் தொகுதியில் இல்லாதவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டால் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்புண்டு என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், பட்டியல் தேர்தல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளதால், அதை சரிபார்த்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்று சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா