சிறுமுகை அருகே இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் விவசாயியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (75), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (59). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அன்புகாட்டி பாசத்துடனும், நேசத்துடனும் வாழ்ந்து வந்தனர். சரஸ்வதி தனது கணவரை கண்ணின் இமைபோல் பாதுகாத்து வந்ததால் கணவர் பழனிசாமி தனது மனைவி மீது உயிரையே வைத்திருந்துள்ளார்.
கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஒருநாள் கூட சண்டை ஏற்பட்டது இல்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த 21/01/2019 ஆண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். பின்னர், தனது மனைவியின் உடலை தோட்டத்திலேயே அடக்கம் செய்து மறைந்த தனது மனைவியின் நினைவுடனே வாழ்ந்து வந்துள்ளார்.
தினசரி மனைவியை நினைத்து கண்ணீர் சிந்தி வந்த பழனிசாமிக்கு தனது மனைவி சரஸ்வதிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியுள்ளது. இதைத்தொடர்ந்து பழனிசாமி தனது மனைவியை அடக்கம் செய்த இடத்தில் நினைவுமண்டபம் அமைத்து, சரஸ்வதியின் திருவுருவச் சிலையை இறந்த ஓராண்டுக்கு பின்னர் நிறுவினார்.
பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி காலை, மாலை இருவேளையும் தீபம் ஏற்றி, பூஜை செய்து வழிபட்டு வருகிறார். எங்காவது வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்ற எண்ணத்தில் வெளியே எங்கும் செல்லாமல் தனது தோட்டத்திலேயே தனது மனைவியை நினைத்து வாழ்நாளை கழித்து வருகிறார்.
இதுகுறித்து விவசாயி பழனிசாமி கூறுகையில், திருமணமான நாள் முதல் கணவன், மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதில்லை.என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார். இரண்டு பேரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவரது நினைவால் நினைவு மண்டபம் அமைத்து அதில் அவரது திரு உருவச் சிலையை வைத்து காலை,மாலை இரண்டு வேளையும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன்.
இதற்காக அவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டியில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில் அவரது போட்டோவை கொடுத்து அவரைப்போலவே தத்ரூபமாக தனது மனைவியின் உருவச் சிலையை சிற்பமாக வண்ணம் தீட்டி வடிவமைத்துள்ளார். மனைவி இறப்பிற்கு பின்னர் அவரது நினைவுகளுடன் வாழ்வதை விட ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும் பொழுதே அவரை உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








