தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..? ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், டெல்லியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என்பவர்தான் இதுபோன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியவர் என்பது தெரியவந்தது. இவர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பிரமுகராக மட்டுமின்றி, வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டது இவர் தான் என்பது தெரிந்தவுடன், தூத்துக்குடி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தன்னை கைது செய்ய கூடாது என பிரசாந்த்குமார் உம்ராவ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நான் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு வந்த வீடியோவை என் நண்பர்கள் வட்டத்தில் பகிர மட்டுமே செய்தேன். வேறு எந்தவிதமான நோக்கமும் எனக்கு கிடையாது. நான் அரசியலில் இருப்பதால் பழிவாங்கும் நோக்கத்கோடு என்மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரசாந்த்குமார் உம்ராவ் வெளியிட்ட வீடியோவால், அமைதியாக இருந்த தமிழ்நாடு கலவர பூமிபோல் மாறியது. அதிலும் இவர் வெளியிட்ட வீடியோவால் தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் உருவானது. இருமாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்னை உருவாக்கும் விதமாகவே இவர் ட்விட் செய்துள்ளார். இது இவரின் முதல் ட்விட் கிடையாது. இது போன்ற பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை ட்விட் செய்துள்ளார். எனவே இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா? இதனால் எவ்வளவு பிரச்னை ஏற்படும்? அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். சமூக பொறுப்பு அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை வேறு தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா