மூணாறு, நைமக்காடு எஸ்டேட்டில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்களை படையப்பா யானை 30 நிமிடம் சாலையில் நிறுத்திய விடியோ வெளியாகியுள்ளது.
தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலத்தின் மூணாறு நகரில் கடந்த சில மாதங்களாக படையப்பா மற்றும் கொம்பன் என இரண்டு காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. குடியிருப்பு பகுதி மற்றும் நகரின் கடைவீதி பகுதி
ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பகல் மற்றும் இரவு வேளையில் உலா வந்து அங்குள்ள
பொருட்களை சேதப்படுத்துவதும், வாகனங்களைத் துரத்துவதும், உணவுப் பொருட்களை
எடுத்து உண்பதும், வீடுகளை இடித்து சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி வீசுவதுமாக இரண்டு காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த சூழலில் படையப்பா என்ற ஒற்றை காட்டுயானை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று
இரவு வாகனத்தை நிறுத்தியது. மூணாறு – மறையூர் சாலையில் உள்ள நைமக்காடு
எஸ்டேட்டில் படையப்பா யானை வாகனங்களை நிறுத்தியது. சுமார் 30 நிமிடம் இந்த
பகுதியின் சாலையில் முகாமிட்டு வாகனங்களுக்கு இடையூறாக இருந்த யானையை அப்பகுதி மக்கள் மற்றும் வாகனங்களில் வந்த பயணிகள் அதிக சத்தம் எழுப்பி யானையை சாலையில் இருந்து காட்டுப் பகுதிக்கு விரட்டினர்.
இதையும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றிய போதிலும் நடவடிக்கை இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள்
படையப்பா யானை சாலையில் வாகனங்களை தடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த யானை உணவு தேடி வாகனங்களை மறிப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் நைமக்காடு எஸ்டேட் பகுதியில் படையப்பா யானை சாலையில் வாகனங்களை தடுப்பது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த மார்ச் 5ம் தேதி இவ்வழியாக வந்த பழனி – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் பேருந்தை நிறுத்திய யானை, பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தது. அதற்கு முன் மூணாறு கன்னிமாலா எஸ்டேட்டில் யானை ஒன்று இறங்கி வீடுகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி, பயிர்களை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








