ஆருத்ரா மோசடி வழக்கு – கைதான ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம்!

ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.  வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. …

ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. 

வேலூரை தலைமையிடமாக கொண்ட  ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது.  இந்நிறுவனம்,  அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது.  இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் மயங்கிய அப்பாவி மக்கள்,  ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் ஆருத்ரா நிறுவனம் வட்டியும் வழங்காமல்,  அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது.  இந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.  இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.   இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இதையும் படியுங்கள்: 30 ஆண்டுகளுக்குப்பின் கீபோர்டில் மாற்றம் – மைக்ரோசாப்ட் அதிரடி!

இதனைத் தொடர்ந்து துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது.    கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு மூலமாக துபாய் அரசிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மோசடி செய்த பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அமலாக்கத்துறை ஏற்கனவே இந்த மோசடி வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.  மேலும் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளது.  மேலும் குற்றப்பிரிவு போலீசாருக்கு முன்பு ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.