அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 பெண் ஓதுவார்களுக்கு நியமன ஆணை வழங்கியதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி பதவி ஏற்ற போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தார். அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007-ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களைத் தமிழ்நாடு அரசு நிறுவியது.
கடந்த 2021-ம் ஆண்டு பெண் ஓதுவார் முதன் முறையாக கோயிலில் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த ஆண்டு 3 பெண் அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று கோயில்களில் உதவி அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், கோயில்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
https://twitter.com/mkstalin/status/1706273669721493869
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிச் சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம்! சுருங்கச் சொன்னால், திராவிட இயக்கப் பற்றாளர்கள் புகழ்வது போல், இது “பெரியாரின் நெஞ்சில் நமது திமுக அரசு வைக்கும் ‘பூ’!”. அமைச்சர் சேகர்பாபு அவர்களை வாழ்த்துகிறேன்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.







