ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்றும், மார்ச் 02-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் குறித்து, சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட யுவராஜா, 58,396 வாக்குகள் பெற்று மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்றிருந்தார்.இதனால் மீண்டும் அவருக்கே ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா என்பது குறித்தும் தமாகா ஆலோசனை நடத்தியது .
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகளான, முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் தாமாக தலைவர் ஜி கே வாசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜே கே வாசன் அவர்கள், அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளது. அவர்களுடன் சுமூகமான உறவு வைத்துள்ளது. இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்துடன் தான் செயல்படுகிறோம். ஈரோடு கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான தேர்தல் இது .தற்போது உள்ள அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்களது கடமை. அதிமுக கூட்டணி தலைவர்களும் எங்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்தில் சந்தித்தேன். அப்போதே தேர்தல் குறித்து பேசினேன். எங்களது இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பது தான். அதற்கு ஏற்றவாறு மாநிலத்தில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது. திமுக கட்சி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக சரிவர செயல்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்த இடைத்தேர்தலின் வெற்றி அடுத்த தேர்தலின் வெற்றிக்கு வழி வகுக்கும் .ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். வெற்றிக்கான முடிவை ஒரு சேர ஒத்த கருத்துடன் எடுப்போம் என்று கூறியுள்ளார்.