கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பா.ம.க இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ஒரு மாத ஊதியத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள். இது சவாலான பணி என்பதில் ஐயமில்லை.
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்ததை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று மருத்துவர் அறிவித்திருந்தார்.
அதன்படி எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களைக் காப்பாற்றுவது தான் நமது முதல் பணியாகும். அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமகவும், மாநிலங் களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் என்ற முறையில் நானும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.







