அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சென்னை தரமணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் நாட்களிலாவது பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







