இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பனார்கோவில் கடைவீதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர், மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்ததை குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயத்தை பெருக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏரிகளை தூர் வாரியதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு எந்தத் திட்டங்களையுமே நிறைவேற்றாத கட்சி திமுக எனத் தெரிவித்தார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் பரப்புரையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில், அதிமுக ஆட்சியில் அதிக அளவில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டதாகவும், கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உயர் கல்வித்துறையில் தமிழகம் சாதனை படைத்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நூற்றுக்கு 49 பேர் உயர் கல்வி படித்து வருவதாகக் கூறினார்.