அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு : முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன….?

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

என்.டி.ஏ. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தரப்பில் இதுவரையில் மூன்று கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. கூட்டணியில் மீதமுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்த பிறகு அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்.

இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின்  தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சுமார் 297 வாக்குறுதிகளை கொண்டுள்ள அந்த அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகளை இங்கு பார்ப்போம் ;

  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000/- சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்
  • குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும். ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • “அம்மா இல்லம் திட்டம்” மூலம், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டு மனையும், சொந்த வீடும் இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வேலைவாய்ப்பு பெறும் வகையில் செயல்முறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
  • சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1200/-ல் இருந்து ரூ. 2,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவித் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  • நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து, சொந்த ஆட்டோ இல்லாதவர்கள், புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 75,000/- மானியமாக வழங்கப்படும்.
  • இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அரசு சார்பில் தனி செயலி உருவாக்கப்படும்.
  • வீடுகளுக்கு, மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சோலார் பேனல் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு ரூ. 30,000/- மற்றும் 2 கிலோ வாட்டிற்கு ரூ. 60,000/- மானியம் வழங்கப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.