மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் தாராதலா பகுதியில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே சேமிப்பு கிடங்கின் கூரை கடந்த ஜூன் 24 அன்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் (60க்கும்மேற்பட்டோர்) இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் 3ஆவது நாளாகத் தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கொல்கத்தா காவல்துறை இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இடி பாடுகளில் இருந்து இதுவரை மொத்தம் 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் சடலமாகவும், எஞ்சிய 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் கொல்கத்தா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கட்டிட விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தக் கோர விபத்து தொடர்பாக கிடங்கு கட்டப்பட்டு வந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர், கட்டுமானக் கட்டமைப்புப் பொறியாளர் உள்ளிட்ட 6 பேரை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது.




