சசிகலா தொடங்கியுள்ள கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை – எடப்பாடி பழனிசாமி

சசிகலா தொடங்கியுள்ள கட்சியினால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின்  தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளரகளை சந்தித்த அவர் பேசியதாவது ;

அதிமுகவின் தேர்தல் குழுவினர் மக்களை சந்தித்து இந்த அறிக்கை தயாரித்துள்ளார்கள். புதிய திட்டங்களுக்கான நிதியை உருவாக்குவது குறித்து நாங்கள் ஆலோசிப்போம். நிதி ஆதாரங்களை அதிகரித்து புதிய அறிவிப்புகளை நடைமுறைக்கு கொண்டு வருவோம். அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படும்.

தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். அதன் பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இன்னும் பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதிய கட்சிகள் கூட்டணி வருவதற்கு வாய்ப்பு இல்லை.

புதிய தமிழகம் கட்சியுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிறகு பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை.

செய்தியாளர்களை திமுகவினர் தாக்குவது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. செய்தியாளர்கள் தாக்கப்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. செய்தியாளர்கள் தாக்கப்படுவது அதிமுக ஆட்சியில் நடக்காது.

சசிகலா தொடங்கியுள்ள கட்சியினால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அதிமுக குறைந்த தொகுதியில் போட்டியிடுவது பின்னடைவு இல்லை. சூழ்நிலை மற்றும் கூட்டணிக்கு தகுந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.