நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவு மாதத்தின் தொடக்க நாளான இன்று, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தமிழ் இனப்படுகொலை நினைவு தொடக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,
இந்த ஒரு மாதத்தை இனப்படுகொலை மாதமாக அனுசரிப்பதாகவும், வரும் மே 18 வரை ஒவ்வொரு ஞாயிறும் சமூக ஆர்வலர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முன்னெடுப்பை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வேளச்சேரியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு குறித்து பேசிய அவர், தேர்தல் ஆணையமாமே ஒரு நாடகக்குழு எனக் கூறியவர், பணம் பட்டுவாட செய்பவர்களை விட்டுவிட்டு, மருத்துவமனைக்கு செல்பவர்கள், மளிகை கடைக்கு செல்பவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து நடிகர் விவேக்கின் இறப்பு குறித்த கேள்விக்கு, தாம் கொரோனா தடுப்பூசி போடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நாம் விசாரித்தவரை விவேக்கிற்கு மாரடைப்பு பிரச்னை இருந்துள்ளது என்றும் அதற்கு தடுப்பூசி காரணமில்லை என விளக்கமளித்தார். மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்திருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணமில்லை எனத் தெரிவித்தார்.







