கால்நடைத் தீவன ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர், பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடைத் தீவன வழக்கில் டும்கா கருவூலத்தி இருந்து 3.13 கோடி ரூபாய் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கிலிருந்து லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக நான்கு வழக்குகள் தொடரப்பட்டது. அதில் மூன்று வழக்குகளிலிருந்து லாலு பிரசாத் ஏற்கனவே ஜாமீன் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு நுரையீரல் தொற்று தீவிரமாக இருந்த காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் லாலு சிகிச்சையில் உள்ளார். கால்நடைத் தீவன ஊழலில் தண்டனை காலம் முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







