மரக்கன்றுகளை நட்டு ரசிகர்கள் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி!

மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்களும், தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவில் தன்னார்வ அமைப்பினர் மறைந்த நடிகர் விவேக்கின் படத்தின் முன்பு…

மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்களும், தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவில் தன்னார்வ அமைப்பினர் மறைந்த நடிகர் விவேக்கின் படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும் படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி மேற்கொண்டனர். அப்போது நடிகர் விவேக் திரை உலகத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சமூக சேவைகளை நினைவுகூர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடும் பணியை அவரை தொடர்ந்து நாமும் மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நாமக்கல்

கோவில்பட்டியில் நடிகர் விவேக் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜீவ அனுக்கிரகா பொது நல மற்றும் பசுமை இயக்கம் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூரில் வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகில் பத்ம ஸ்ரீ நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகள் நட்டனர். அதேபோல திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நல இயக்கங்கள் இணைந்து நடிகர் விவேக்கிற்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திருவாரூர் அருகே அலிவலம் பகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு கூண்டு அமைத்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு ஏரியில் 1,000 மரக்கன்று நடும் பணியை விவேக் தொடங்கி வைத்ததை நினைவு கூறும் வகையில் மாபா அறக்கட்டளை , மற்றும் ஆவடி பார்க் வாக்கர்ஸ் கிளப் , பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா இயக்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர், மெழுகுவர்த்தி ஏந்தி 500க்கும் மேற்பட்ட பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அப்துல் கலாமின் விதைகள் மற்றும் நம்ம அறக்கட்டளையின் சார்பாக நடிகர் விவேக் உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்துல் கலாமின் விதைகள் மற்றும் நம்ம அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.