சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான் மீட்பு: X தளத்தில் நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்…

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை தீயணைப்புத்துறையினரின் மீட்டுள்ளனர்.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல…

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை தீயணைப்புத்துறையினரின் மீட்டுள்ளனர். 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல் எதிரொலி – நாளையும் (டிச.6) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன.  அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  மிக்ஜாம் புயல் நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே,  பாபட்லாவிற்கு அருகே,  இன்று கரையை கடந்தது.

இந்த நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.  அவரின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டது.

இதனை தொடர்ந்த அவரது வீட்டிற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நடிகர் விஷ்ணு விஷாலையும்,  அவரது வீட்டில் தங்கியிருந்த பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கானையும் மீட்டனர்.  இந்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்,  தான் வெள்ளத்தால் சிக்கி தவிப்பதாக பதிவிட்ட சில மணி நேரத்தில் மீட்ட தீயணைப்புத்துறையினருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு நடிகர் அமீர்கான் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.