தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வியாழனன்று முதலமைச்சர் விஜய் வசமுள்ள காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பேரவைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. அவை கூடியதும், முதலமைச்சர் விஜயின் பதிலுரைக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், “ஒரு மாநிலத்தோட முன்னேற்றம் சாலைகள் அமைக்கப்படுவதாலோ தொழிற்சாலை உருவாக்கப்படுவதாலோ மட்டுமல்ல; அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் பயமில்லாமல் வாழ்கிறதில் தான் அந்த மாநிலத்தின் முன்னேற்றம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு ஒழுங்காக இருந்தால் வேலை வாய்ப்பு வரும், தொழில் முன்னேற்றம் வரும், பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
காவல்துறையைப் பொருத்தவரை சட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு உற்ற நண்பர்களாகவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலருக்கு இந்த இரண்டும் மிகவும் அவசியம். காவலர்கள் அச்சமும் பயமும் இன்றி துணிச்சலோடு செயல்படுவதற்கு இந்த அரசு உதவியாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எந்த ஒரு அதிகாரிகளாக இருந்தாலும், எந்த ஒரு அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறை நடவடிக்கைகளில் தலையீடு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன். குற்றவாளி யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறேன்.
சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த அரசைக் குறை கூறும் வகையில் கூறியவர்களின் கருத்துக்களைக் கூட மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, அவர்களின் கவலையையும் இந்த அரசு எடுத்துக் கொள்கிறது. உள்நோக்கத்தோடு கூறப்படும் கருத்துகளில் கூட ஏதேனும் உண்மை உள்ளதா என்பதைப் பரிசீலித்து அதனை எடுத்துக் கொள்கிறோம்.
சட்டம் ஒழுங்கு எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை அன்றே நமது திருவள்ளுவர் “யாரிடமும் சார்பில்லாமல் நன்றாக ஆராய்ந்து நடுநிலையோடு நீதி வழங்குவதே முறையான ஆட்சி” என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் சமூக நீதியை வலியுறுத்தினார். நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழை எளிய மக்களின் நலனை தனது அரசின் மையமாகக் கொண்டிருந்தார்.
இவை அனைத்தையும் வைத்து ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக் கூடாது; மக்களின் நலனையும் நம்பிக்கையையும் காக்கும் அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடந்து விட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறிவிடக்கூடாது.
காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை துறை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் இந்த அரசைப் பாராட்டியுள்ளனர்; சிலர் இந்த அரசைக் குறை சொல்லியுள்ளனர்; சிலர் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்துள்ளனர். சிலர் துறை ரீதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்தையும் கணக்கில் கொண்டு உரிய துறைகளுக்குக் கொண்டு செல்லப்படும் என்ற உறுதி அளிக்கிறேன்.”என்றார்.




