“Approval இல்லை Note Approval தான்” – பேரவையில் சபாநாயகர் நகைச்சுவை பேச்சு!

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் பார்க்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படுகிறது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத அரசு குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், சௌமியா அன்புமணி பேசும்போது லஞ்சம் மற்றும் ஊழலற்ற அரசு குறித்து குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

தற்போது அமைந்துள்ள புதிய அரசாங்கம் குறித்து வெளியே விசாரித்தபோது, இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும், எந்தவிதமான ரகசிய நோக்கம் இல்லாமல் அரசு செயல்பட வேண்டும் என்றும் வடஇந்திய பத்திரிகைகள் பாராட்டி வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். இதற்கு முக்கிய காரணம், எந்த ஒரு கோப்பும் இந்த ஆட்சியில் தற்போது வரை தேக்கமடைந்து இருக்கவில்லை என்பதுதான். ஒரு கோப்பு தேக்கமடைந்தால், அதற்கு என்ன காரணம், யாரைச் சந்திக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படும். ஆனால், இந்த ஆட்சியில் ஒரு கோப்பு கூட தேக்கம் அடைவதில்லை. இதனால் பணிகள் விரைந்து நடைபெறுகின்றன.

இதனை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் மட்டுமின்றி, வடஇந்திய பத்திரிகைகளும் பாராட்டி வருகின்றன. இதைப் பார்த்து தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சரின் உதவியாளர் என்னை சந்தித்தபோது, இது எப்படி தமிழகத்தில் சாத்தியமாகிறது? என்று கேட்டார். அதற்கு, பயனாளிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றேன். ஒரு விஷயத்தைக் கூறுகிறேன் நீங்கள் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.

அப்போது, சரி, சொல்லுங்கள் என்றேன்.

அவர் சார்ந்த அமைச்சரிடம் ஒரு கோப்பை நீட்டினால், வந்துவிட்டதா? என்று கேட்பார். தலையை ஆட்டி வந்துவிட்டது என்று கூறினால், அந்தக் கோப்பில் Approval என்று குறிப்பிடுவார்.

ஒரு நாள் ஒரு கோப்பில் Approval என்று குறிப்பிட்டு விட்டார். ஆனால், அந்தக் கோப்பிற்குப் பணம் வரவில்லை. இதை அறிந்து உடனடியாக உள்ளே சென்று, பணம் வரவில்லை என்று தெரிவித்தேன். உடனே Approval என்பதற்கு அருகில் ‘Not Approval என்று எழுதிவிட்டார்.

மறுநாள் அதே கோப்பில் பணம் வந்துவிட்டதாகத் தெரிவித்தபோது, ஏற்கனவே Not Approval என்று எழுதிவிட்டாரே என்று நினைத்தேன். Approval, Not Approval இப்போது என்ன என பார்த்தால் அந்தக் கோப்பில் Not என்பதற்கு அருகில் e என்ற எழுத்தை மட்டும் சேர்த்து, Note Approval என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
இதனை நான் கூறுவதற்குக் காரணம், பயனுள்ள பணிகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால் எந்தவிதமான காலதாமதமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

இத்தகைய சூழ்நிலை மற்ற மாநிலங்களில் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசை மக்கள் வரவேற்கின்றனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் பார்க்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படுகிறது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.