மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி…

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி ஆட்சி அமைத்த பிறகு கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம் சாட்டினார். அதனைத் தொடந்து இந்த விவகாரம் சிபிஐ-ன் கைகளுக்கு சென்றது. இதனை விசாரித்த சிபிஐ, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இதையும் படியுங்கள் : ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – கடலூரில் அதிர்ச்சி!

இந்நிலையில் நேற்று மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு அழைத்த சிபிஐ, அதிரடியாக அவரை கைது செய்தது. இதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த ஆம்ஆத்மி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

– வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.