பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டி

  அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் மிரட்டியதாலேயே தனது பேரன் பிறழ் சாட்சியம் அளித்ததாக சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின்…

 

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் மிரட்டியதாலேயே தனது பேரன் பிறழ் சாட்சியம் அளித்ததாக சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அமுதா, 2வது கட்ட விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின் போது, மாரியப்பன், சுபாஷ், இசக்கிமுத்து, வேத நாராயணன், செல்லப்பா மற்றும் மாரியப்பன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். இந்த 6 பேருடன் சண்டையிட்ட எதிர் தரப்பினரும் விசாரணைக்கு நேரில் வருகை தந்த நிலையில், மொத்தம் 12 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

இதனிடையே, விசாரணை நடைபெற்ற அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த உளவு பிரிவு காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறை மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையால் காவலர்களை வெளியேற்றி அமுதா விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள் : பென்னிகுயிக் சிலை மூடப்பட்ட விவகாரம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் விளக்கம்

இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிறழ் சாட்சியாக மாறிய சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, ”காவல்துறை மிரட்டியதாலேயே எனது பேரன் நடந்த உண்மைகளை மாற்ற,  கீழே விழுந்து பற்களை உடைத்துக் கொண்டதாக கூறினான். அதற்காக அவனிடம் ரூ.45,000 கொடுத்தார்கள்.

பயந்து போய் வீட்டில் உள்ள பெண்கள் சாட்சி சொல்ல வரவில்லை. பல்லை பிடுங்கிவிட்டு பிறப்புறுப்பில் மிதித்து துன்புறுத்தியதால் அரை உயிராக மருத்துவமனையில் கிடக்கிறான். அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளேன். நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் இவ்வாறு தாக்குவாரா. அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

பேரன் மீது நடத்திய தாக்குதல் அனைத்தும் எனக்கு தெரியும். இரண்டு பற்களை பிடுங்கிவிட்டனர். என்னையும் சாட்சி சொல்ல போக வேண்டாம் என பலர் தடுத்தனர். காலையில் ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்ட தெம்பில் வந்து, தற்போது உண்மையை சொல்லிவிட்டு புறப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.