16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் ஆசிய ஹாக்கி போட்டி – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் ராடிசனில்…

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் ராடிசனில் ஹாக்கி தொடர்பான நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலோ நாத் சிங், தமிழ்நாடு விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரின் சென்னை இணை ஒருங்கிணைப்பாளர் சேகர் ஜே மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைக்கு நமது மாநிலத்தில் இருந்து துறை சார்ந்தவர்கள் சென்று பார்த்தோம். அப்போது தான் தமிழகத்தில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி
வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆடவருக்கான ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் 16 ஆண்டுகளுக்கு பிறகு இங்கே நடைபெறுகிறது. செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி முன்னோட்டமாக அமையும். 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இவை அனைத்தும் ஆசியாவின் முன்னணி அணிகள் ஆகும் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே முதலமைச்சர் நேரம் இருந்தால், இந்த போட்டிகளை அவரே நேரில் வந்து துவக்கி வைப்பார். இனிதான் தான் இந்த ஹாக்கி தொடருக்காக நிதி ஒதுக்கப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று, இந்த போட்டியையும் தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவரிடம், தமிழ்நாடு வீரர்களுக்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள, இந்த தொடரில் வழங்கபப்டுமா? என்று எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழக வீரர்கள் விளையாடுவது, ஹாக்கி இந்தியா தேர்வுக் குழுவின் முடிவை பொறுத்தே அமையும் என பதிலளித்தார்.

இந்தியாவில் கடைசியாக ஆசிய கோப்பை 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடத்தப்பட்டது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில், அதுவும் சென்னையில் நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இறுதியாக, இந்தோனேஷியாவின், ஜகார்த்தாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Udhaystalin/status/1647883297496907777?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.