தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பகல் முழுவதும் வாட்டி வதைக்கும் வெப்பத்தின் தாக்கம் தணிந்து, இரவு நேரங்களில் இதமான சூழல் நிலவிவருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளாகினர்.
ஆனால், திடீரென கொட்டித் தீர்த்த இந்த கனமழையால் பயிர்கள் செய்தமடைந்தால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வேதனை அடைந்தனர். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ வீராணம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சாய்ந்து சேதமகின.
அறுவடைக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், சேதமாகிய வாழைக்காய்களைப் பழுக்க வைக்க முடியாமலும், காய்கறிக்குக் கூட பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதால், அவற்றை மண்ணில் போட்டு அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் இயற்கை பேரிடரால் பாதிப்படைந்த விவசாயிகள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான விவசாயிகள், சாய்ந்த வாழைத்தார்களுடன் வருகை தந்து, சேதமடைந்த வாழைப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி புகார் அளித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன், விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.
—சௌம்யா.மோ






