கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரக் குறைபாடுகளை களைய வேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 817 மாணவ, மாணவியர்கள் படித்தும், 35 ஆசிரியர்கள் பணியாற்றியும் வருகின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் எனவும், கழிவறைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் மாணவ, மாணவியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இந்த கோரிக்கையை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன், மாணவர்களும் இணைந்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தலைமை ஆசிரியர் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.
—அனகா காளமேகன்







