ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக…

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டும், சில இடங்களில் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் தங்க கட்டிகள் இருப்பதாக வாகனத்தில் வந்தவர்கள் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தங்க கட்டிகளை ஏற்றிவந்த வாகனம்

அவர்கள் வைத்திருந்த ஆவணங்களை பார்த்தபோது அதில் 400 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாகவும், ஆனால் வாகனத்தில் வந்த ஊழியர்கள் 1425 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததால், பறக்கும் படை அதிகாரிகள் தங்க கட்டிகள் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்

தொடர்ந்து, அந்த வாகனத்தில் இருப்பது 400 கிலோ தங்க கட்டிகளா அல்லது 1425 கிலோ தங்க கட்டிகளா என்பது குறித்து சோதனை செய்ய உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனத்தில் இருக்கும் தங்க நகை கட்டிகளின் எடை மதிப்பு எவ்வளவு உரிய ஆவணங்களுடன் எத்தனை கிலோ தங்க நகை கட்டிகள் உள்ளது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.