எத்தனை முறை ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றாலும், வெற்றி எங்களுக்குத் தான் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது.…

ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையிலும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பின்னர் அங்குள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னத்துடன் கூடிய 75 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக்கை வெட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், மறைந்தாலும் உலகம் இருக்கின்ற வரை பெயர் சொல்லும் தலைவி ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்காக அயராது உழைத்து பாடப்பட்டவர் ஜெயலலிதா.

அதிமுகவை வலிமைமிக்க எழுச்சிமிக்க இயக்கமாக எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துள்ளார். திமுகவுடன் கைகோர்த்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என நினைத்தவர்கள் அடையாளம் இல்லாமல் போய்விட்டனர். ஓபிஎஸ் தரப்பு இன்னும் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்குத் தான்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.