கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,65,21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் செப். 15-ம் தேதி நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை, மாதந்தோறும் 15-ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. 30 நாள் என்பது திட்டம் தொடங்கப்பட்டது முதலா என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு என்று குறுந்தகவல் வந்ததோ, அந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து செப்டம்பர் 18-ம் தேதி முதல் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. பலருக்கும் அன்றிலிருந்து ஓரிரு நாள்களில் குறுந்தகவல் கிடைக்கப் பெற்றிருக்கும். எனவே, இன்னும் ஓரிரு நாள்களில் காலக்கெடு முடிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை கிட்டத்தட்ட 9.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.







