கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் கருத்துக்களால் ஆபரேஷன் லோட்டஸ் அங்கும் தொடங்கி விட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், ஆட்சி கவிழ்ப்பு பற்றிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன…? கவிழ்ந்து விடுமா அல்லது கவிழ்க்கப்படுமா காங்கிரஸ் அரசு…? விரிவாக பார்க்கலாம்….
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி, பதவி பறி போவதைத் தவிர்த்து, ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றி அல்லது பதவி விலகச் செய்து, தங்கள் அல்லது தாங்கள் சார்ந்த ஆட்சியை கொண்டு வரும் பாஜகவின் யுக்தியை ஆபரேசன் லோட்டஸ் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இதன்படி, தேர்தல் முடிவுகளையே மாற்றி, திடீர் ஆட்சி அல்லது ஆட்சி மாற்றத்தை மாநிலங்களில் ஏற்படுத்தி வருகின்றனர் என்கிறார்கள்.
குறிப்பாக, 2014-16ல் அருணாச்சல் பிரதேசம், 2017ல் மணிப்பூர், கோவா, 2018ல் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க முடியவில்லை. பாஜக பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தது. கடந்த 2019ல் சிக்கிம் மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமலேயே தங்களது ஆட்சியை அமைத்தனர். இங்கெல்லாம் அதிக இடங்களில் வென்ற கட்சி ஒன்று, ஆட்சி அமைத்த கட்சி வேறு என்பது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
பெரிய மாநிலங்களும் தப்பவில்லை
வட கிழக்கு மாநிலங்கள் போன்ற சின்ன மாநிலங்கள் மட்டுமல்ல, பெரிய மாநிலங்களும் தப்பவில்லை என்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிக உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்சரானார்.
ஆனால், இரண்டாண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது. காரணம், காங்கிரஸ் கட்சியில் அப்போது இருந்த இளம் தலைவர், ஜோதிராதித்ய சிந்தியாவின் கலகத்தால், 22 எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகினர். பதவி விலகியவர்கள் பா.ஜ.க பக்கம் செல்ல, காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தது. பாஜகவின் கை ஓங்கியது. காங்கிரஸிடமிருந்து ஆட்சி கை நழுவியது. சிவராஜ் சிங் தலைமையில் மீண்டும் தாமரை ஆட்சி மலர்ந்தது.
கர்நாடகா மாற்றங்கள்
இதே போல், கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றன. மொத்தமுள்ள 222 இடங்களில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தன. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி முதலமைச்சரானார்.
ஆனால், அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பாஜக பக்கம் சாய்ந்தனர். இதனால், ஓராண்டில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. பாஜக-வின் எடியூரப்பா மீண்டும் முதலமைச்சரானார்.
சுதாரித்த நிதிஷ்குமார்
இந்த வரிசையில், மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள். அடிக்கடி பதவி ஏற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் என தொடர்கிறது. இதனால், பாஜக-வின் நீண்ட கால கூட்டணிக் கட்சியான சிவசேனா, எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பிளவுபட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இதில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் சுதாரித்ததையும் பார்க்க முடிகிறது. அவர் ஆபரேசன் லோட்டஸை முறியடித்தவர் என்றே சொல்லலாம் என்கிறார்கள்.
அவ்வளவு தூரம் போக வேண்டாம். தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ள புதுச்சேரியில், 2016 முதல் 2021 வரை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி இருந்தார். ஆட்சிக் காலம் நிறைவு பெற 3 மாதங்கள் இருந்த நிலையில், காங்கிரஸின் 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம் சென்றனர். பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி ஆட்சி கவிந்தது. இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் வென்று, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனாலும், ’’என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை விழுங்கப் பார்க்கிறது பாஜக. ஆளுநரைக் கொண்டு தனி ஆட்சி நடத்துகிறார்கள்.
முதலமைச்சர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. யார் முதலமைச்சர் என்றே தெரியவில்லை என்றெல்லாம் அங்கு விமர்சங்கள்’’ வருகின்றன. அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கம் ஆபரேசன் லோட்டஸின் தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
கர்நாடாகத்தில் ஆபரேசன் லோட்டஸ்?
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. பாஜக 66 இடங்களிலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றன. சித்தராமையா முதலமைச்சராக, டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் உள்ளனர். மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா, ’’பாஜகவை சேர்ந்த 3 பேர், 50 கோடி ரூபாய் பணம், அமைச்சர் பதவி தருவதாக என்னிடம் பேரம் பேசுகின்றனர்’’ என்று என்று பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
இதையடுத்து ‘’ஆபரேஷன் லோட்டஸ் மூலம் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கிறது. ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கூட பாஜகவால் இழுக்க முடியாது’’ என்கிறார் சித்தராமையா. துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறுகையில், ‘’பாஜகவின் திட்டம் இங்கு ஒருபோதும் நடக்காது’’ என்கிறார்.
6 மாதத்தில் ஆட்சி கவிழும் – குமாரசாமி
இதற்கிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் குமாரசாமி, ’’கர்நாடகா காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும். என்னுடைய அரசு எப்படி கவிழ்க்கப்பட்டதோ அப்படியே தற்போது சித்தராமையா தலைமையிலான ஆட்சியும் கவிழ்க்கப்படும்’’ என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதற்கு, ’’பாஜகவுடனான கூட்டணியால் மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்றைக்கு பிளவு பட்டுள்ளது. அவர் தன் கட்சி எம்.எல்.ஏக்களைத் முதலில் தக்க வைக்கட்டும்’’ என்கிறது காங்கிரஸ்.
அதேநேரத்தில், ஆட்சி கவிழ்ப்பு குறித்த, காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. குறிப்பாக ‘’கர்நாடகத்தில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்களை வைத்திருக்கிறது. ஆகையால் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு வாய்ப்பில்லை. ஆனால், காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது’’ என்கிறது பாஜக.
பெரும்பான்மை பலத்துடன் உள்ள கர்நாடகா காங்கிரஸ் அரசு கவிழுமா? சித்தராமையா- சிவக்குமார் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்குமா? டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் வரிசையில், ஆபரேசன் லோட்டஸ் முறியடிக்கப்பட்டு, கர்நாடகத்திலும் ஆட்சி நிலைக்குமா? என்ன செய்யப்போகின்றன பாஜக, காங்கிரஸ்….? பொருத்திருந்து பார்க்கலாம்…
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண….







