அண்மையில் திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற கட்டட சீரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது!

அண்மையில் திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒலியியல் தளவாடங்கள் மற்றும் கழிப்பறைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது புதிய…

அண்மையில் திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒலியியல் தளவாடங்கள் மற்றும் கழிப்பறைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது புதிய கட்டடம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.  இந்நிலையில், சிறப்பு அமர்வின் போது எதிரொலி சத்தம் காணப்பட்டது. இதனால் ஒலி ஓடுகளை நிறுவும் பணி தற்போது முடிவடைந்தாலும், எதிரொலி சிக்கலைத் தீர்க்க சில பொருட்கள் மாற்றப்படுகின்றன.

அதோடு, நாடாளுமன்ற வளாகத்திற்குள் புதிய தேவைகளை கோரியவர்களுக்கு அவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.  புதிய கட்டடத்தில் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மக்களவையின் ஆதாரங்களின்படி, கட்டடத்தில் பணிபுரியும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன், பாதுகாப்பு தடுப்புகள், பிளம்பிங் இணைப்புகள், அலமாரிகள் மற்றும் பிற பர்னிச்சர்கள் உள்ளிட்ட துணைப் பணிகளுக்கு, CPWD நிறுவனம், 6.64 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளது; மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் மூன்று முற்றங்களில் சேதமடைந்த மணற்கல்லை மாற்ற ரூ.5.99 லட்சம் டெண்டர்; அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பணிகளுக்கான ரூ.20 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது.

முன்னதாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு, புதிய கட்டிடம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு இடையே வார்த்தைப் போர் வெடித்தது. குறிப்பாக காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ஜெய்ராம் ரமேஷ் செப்டம்பர் 23 அன்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு பாஜக தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான ஜே பி நட்டா பதில் அளித்து எதிர்வினையாற்றினார்.

இந்நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே சீரமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.