சோஷியல் மீடியாவை வைத்து மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் – அன்புமணி ராமதாஸ்…!

சோஷியல் மீடியாவை பயன்படுத்தி மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் ஈரோடு மாவட்டம் பவானியில் மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசிதாவது:

கர்நாடகா அரசு நம்மை கேட்காமல் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயன்று வருகின்றனர். இதனை குடிநீருக்கு பயன்படுத்தப் போவதாக கர்நாடகா முதல்வர் கூறி வருகிறார். ஆனால் அணையை கட்ட தமிழக அரசு விடக் கூடாது.

காவிரி ஆற்றில் வெறும் கழிவு நீர் தான் வருகிறது. அணையை கட்டி விட்டால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. தமிழகத்தில் காவிரியை நம்பி ஐந்தரை கோடி மக்கள் உள்ளனர். முக்கால்வாசி தமிழ்நாட்டு மக்கள் காவிரியை நம்பி உள்ளனர். இதனால் 28 மாவட்டங்கள் பாதிக்கப்படும்.

காவிரி இல்லை என்றால் பசி, பட்டினிதான். இதனால் எட்டு கோடி மக்களும் பாதிக்கப்படுவர்கள். எந்த காரணத்திற்காகவும் கர்நாடகா அரசு அணையை கட்ட விடக் கூடாது. இது தமிழகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனை.

12.500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ஆக்கிரமித்து மேகதாது அணையை கட்ட இருக்கின்றனர். மத்திய அரசு கர்நாடகா அரசிற்கு தான் ஆதரவாக இருக்கின்றனர். ஏனென்றால் அங்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றனர்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் தண்ணீரை நிறுத்தினால் போதும். கர்நாடகா அரசு ஒரு ஆண்டு கூட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் விடுவதில்லை. சோஷியல் மீடியாவை வைத்து ஆட்சி மாற்றம் நடந்தது போல இதே சோஷியல் மீடியாவை வைத்து அணை கட்டுவதை தடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.