’மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தயாரிப்பாளர் வினோத் சொகுசு காரை பரிசளித்துள்ளார்.
விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15-ம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பை பலரும் பாராட்டினர். இதையடுத்து விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் படத்தின் வரவேற்புக்கு அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தனர்.
மார்க் ஆண்டனி திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அமேசான் பிரைம் தளத்தில் கடந்த அக்.13-ம் தேதி வெளியாகி ஓடிடி தளத்திலும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
https://twitter.com/Adhikravi/status/1718980415984390203
இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ’மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத், படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் கதாநாயகன் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு என்ன பரிசு காத்திருக்கிறது என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.








