அப்படிப்பட்டவர நீங்க பெஞ்சில் அமர வச்சிருக்கீங்க…. – வைபவை களமிறக்காதது தொடர்பாக ரவி சாஸ்திரி அதிருப்தி….!

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சமீபத்திய போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படாதது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரராக வைபவ் சூர்யவன்ஷி விளங்குகிறார். நடப்பு ஆண்டு ஐபிஎலில் ராஜஸ்தான் அணிக்காக 776 ரன்கள் குவித்து, தொடரிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரராக அவர் திகழ்ந்தார். அதேபோல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பையை இந்தியா வென்றதிலும் வைபவ் முக்கிய பங்காற்றினார்.

வைபவின் சிறப்பான ஆட்டத்தினால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி 20 போட்டிகளிலும் வைபவ் களமிறக்கப்படவில்லை. இந்திய அணியும் 2 போட்டிகளை கொண்ட டி 20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்திடம் இழந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டி 20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. ஆனால் மழையால் பாதிக்கப்பட்டு இப்போட்டி கைவிடப்பட்டது. இப்போட்டியிலும் வைபவ் பிளேயிங் 11-னில் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வைபவ் சமீபத்திய போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படாதது தொடர்பான இந்திய அணியின் முடிவிற்கு தனது அதிருப்தியை வெளியிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அவர் (வைபவ் சூர்யவன்ஷி) விளையாடியிருக்க வேண்டும். அந்த ஆடுகளம் மிகவும் மெதுவாகவும், பந்து எழும்பாத தன்மையுடனும் (spongy track) இருந்தது. அது மிகச்சிறிய மைதானம் என்பதால், அவர் பந்துகளை மைதானத்திற்கு வெளியிலேயே விளாசியிருப்பார். எதிரணியினரைத் துவம்சம் செய்திருப்பார். இப்போது, ​​இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை. கூடிய விரைவில் அவருக்கு ஒரு வாய்ப்பை அளியுங்கள்.

ஐபிஎல் தொடரில் அவர் எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். எந்த வேகப்பந்து வீச்சாளரையாவது அவர் விட்டுவைத்தாரா..? அப்படிப்பட்டவரை நீங்கள் பெஞ்சில் அமர வைத்திருக்கிறீர்கள்.

அவர் ஒரு ‘எக்ஸ்-ஃபேக்டர்’ (X-factor) போன்றவர். எந்தவிதமான தேவையற்ற அழுத்தமும் அவரிடம் இல்லை. அவருக்கு வயது வெறும் 15 தான். இளமைக்கே உரிய துடிப்பு அவரிடம் உள்ளது. அவருக்குப் பயம் என்பதே இல்லை. முதல் 2-3 ஓவர்களிலேயே அவர் அதிரடியாக ஆடத் தொடங்கிவிட்டால், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட உதவும் வகையிலான ஒரு வலுவான தொடக்கத்தை அவர் பெற்றுத் தருவார். எனவே, அணியில் அவருக்கு நிச்சயம் இடம் அளிக்க வேண்டும். என்று அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஜூலை 4-ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.