பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல். ஏ வானதி சீனிவாசன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கறுப்பு நிற சேலை அணிந்து வந்ததால் பேரவைக்கு வெளியிலும், உள்ளேயும் சிரிப்பலை எழுந்தது.
ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து அவர் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்ததோடு, ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்போம் என்ற பதாகைகளுடன் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும் இன்று முழுவதும் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும், இன்று கருப்பு நிற சேலை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்வு சட்ட பேரவைக்கு உள்ளேயும், வெளியிலும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
மேலும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருப்பு சேலை அணிந்து வந்தீர்களா என்று வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்க, அதற்கு ‘இல்லையே’ என்று அதிர்ச்சி கலந்த முகத்தோடு பதிலளித்துள்ளார். பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு உடையில்தான் அவைக்கு வந்துள்ளார்கள் என்று கூறி வானதியை புகைப்படம் எடுக்க சூழ்ந்த ஒழிப்பதிவாளர்களிடம், ’ஐயயோ கடவுளே!’ இன்னைக்கா! இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது முதலில் வழியை விடுங்க என்று சொல்லி விட்டு உள்ளே நுழைந்தாராம்.
கருப்பு சேலையில் வந்திருந்த வானதியை பார்த்ததும் பேரவைக்கு உள்ளே இருந்த உறுப்பினர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கியுள்ளனர். பிறகு அவை தொடங்கியதும் கேள்வி நேரத்தின் போது பேசிய வானதி சீனிவாசனிடம் சபாநாயகர் அப்பாவும், நீங்களும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போன்று கருப்பு நிற உடையில் வந்துள்ளீர்கள் என்று கேள்வியெழுப்ப, அதற்கு பதிலளித்து பேசிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழகத்தில் எமர்ஜென்சியின் போது எப்படியெல்லாம் ஆளும் கட்சி தலைவர்கள் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே நான் கருப்பு உடையில் வந்துள்ளேன்” என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா