திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். இதுவரை ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது.
பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலை பேச கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார்.
ஆனால் தற்போது அதிமுகவினர், பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் பற்றி விஜய் வாய் திறந்தாரா? ஏன் பேசவில்லை; கொள்கை எதிரிகளை அவரால் கண்டிக்க முடியாது, அவர்களுக்கிடையே அப்படி ஒரு உறவு இருக்கிறது என்பதுதான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.







