மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று பேசிய பேச்சு அதிமுக்கியமான ஒரு விவகாரமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் பல கேள்விகள் எழுகின்றன. உள்ளூர் மொழிகள் என்று பிரதமர் மோடி எதைக் கூறுகிறார்? மாநில மொழிகளை பாதிக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை உள்ளதாக கூறப்படும் நிலையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் என்பதன் பேசுபொருள் என்ன விளைவுகளைக் கொடுக்கும்? இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் மொழிகளின் நிலை என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது. இந்த கட்டுரையை இரண்டு பகுதிகளாக பிரித்து வாசகர்கள் படிக்க வேண்டியுள்ளது. தற்போது நீங்கள் படிக்கும் இந்த கட்டுரை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி ஏன் இல்லை? என்பது. இதன் இரண்டாவது பகுதி, நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி : மோடி, அமித்ஷா முரண்பாடுகளின் முடிச்சி என்பதாகும். சரி முதல் கட்டுரையின் மைய கருத்திற்கு வரலாம்.
என்னென்ன நடைமுறை சிக்கல்கள் உள்ளன?:
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு படி உள்ளூர் மொழிகளை மாநில உயர்நீதிமன்றங்களில் செயல்படுத்த முடியுமா என்று பார்க்கலாம். அதிலும், பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில், சார்பு நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளது. ஆனால், தீர்ப்பு திரட்டுகள், தீர்ப்பு மொழியாக்கம் ஆகியவை தமிழில் முழுமையாக இல்லை. அதனால், வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆங்கிலத்தில் தான் மேற்கோள்காட்டி வழக்காடுகிறார்கள்.
அடிப்படை கட்டமைப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்புகள், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தையுமே உள்ளூர் மொழிகளில் கொண்டு வர வேண்டும். அதாவது, தமிழில் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கென்ற தனிப்பட்ட கட்டமைப்பை அரசு அமைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வரக்கூட தீர்ப்புகளை அன்றே மொழியாக்கம் செய்து வெளியிடக்கூட அமைப்பு அடிப்படையாக தேவை. அந்த அடிப்படை அமைப்பு தற்போது வரை உள்ளூர் மொழிகளில் இல்லை. இந்த அடிப்படை கட்டமைப்பை பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொண்டுள்ளாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால், நமது நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் படித்தது, தேர்ச்சி பெற்றது, வழக்கறிஞர்களாக பயிற்சி பெற்றது எல்லாமே ஆங்கிலத்தில் தான். தமிழில் வழக்காடும் வழக்கறிஞர்கள் கூட பெரும்பாலும் லத்தின் சொற்கள், ஆங்கில சொற்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதால் அவர்களால் அதில் எளிதாக மாறிவிட முடியும். ஆனால், உள்ளூர் மொழிகளுக்கு அவர்கள் மாறுவது என்பது மிகக்கடினமான விஷயமாக இருக்கும். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த நடைமுறையை மாற்றம் செய்ய வேண்டும்.
சட்ட தமிழ் களஞ்சியம் இருக்கிறதா?:
2000 ஆண்டுகளின் தொடக்கத்தில், சட்ட பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ஆதிசேஷன் தலைமையில், சட்ட தமிழ் களஞ்சியம் உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்தது. தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் விஜயகுமார், சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் நாராயண பெருமாள், சென்னை சட்டக்கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் காம்ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழு சட்ட சொற்களஞ்சியம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளை தமிழாக்கம் செய்து கையெழுத்து பிரதிகளாக உருவாக்கினார்கள். அந்த கையெழுத்து பிரதிகளை எல்லாம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ஆதிசேஷன் அனுப்பி வைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அந்த கையெழுத்து பிரதிகள் என்ன ஆனது என்று கூட இதுவரை தகவல் இல்லை. முறையான சட்ட சொற்களஞ்சியம் கூட இல்லாத நிலையில், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை எப்படி பயன்படுத்த முடியும்? நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்று அரசியல்வாதியாக பேசிவிடலாம். ஆனால், அடிப்படையாக முதலில் சட்ட சொற்களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். பின்னர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் உடனடியாக உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இதற்கு தனி குழு அமைக்க வேண்டும்.
மாநில நீதிபதிகள் நியமன முரண்பாடு:
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உயர்நீதிமன்றங்களில் இதுவரை ஆங்கிலம் மட்டும் தான் வழக்காடு மொழி. நீதிபதிகள் நியமனத்தின் போதும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீதிபதிகள் தான் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் போது, உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவது சாத்தியமா என்பதை யோசிக்க வேண்டி உள்ளது. ஆக, இந்த நடைமுறை சிக்கலை தீர்க்க, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அல்லது அந்தந்த மாநில நீதிமன்றங்களுக்கு அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களைத் தான் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். அதே போல, நீதித்துறைக்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்வது இல்லை என்ற விமர்சனமும் உள்ளது.
நீதித்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, மொழி பெயர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தனியான குழுவை அமைத்தால் மட்டும் தான் பிரதமர் மோடி சொல்வதை போல் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்த முடியும். அவ்வாறு இல்லை என்றால் ஒரு அரசியல்வாதியின் பேச்சைப் போலவே இந்த வார்த்தைகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கும்.







