நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி : மோடி, அமித்ஷா முரண்பாடுகளின் முடிச்சி

பாஜகவின் மொழிக்கொள்கை தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் இருவேறு கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டுள்ளனர். அதாவது, அண்மையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில்…

பாஜகவின் மொழிக்கொள்கை தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் இருவேறு கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டுள்ளனர். அதாவது, அண்மையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசும் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளூர் மொழிகளை நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். அதேபோல, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு நேர் எதிராக கடந்த வாரம், ஆங்கிலத்திற்கு மாற்றாக அலுவல் மொழியாக இந்தியை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கூறினார். இந்த சூழலில் தான், மோடி – அமித்ஷாவின் மொழிக்கொள்கைகளை ஆராய வேண்டி உள்ளது.

அமித்ஷா மோடி முரண்பட்ட கருத்துகள்:

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு கருத்தை முன்வைத்தார். அதாவது,
”நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்கச் செய்யும். மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.
பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை கொண்டு இந்தி மொழியை நெகிழ்வாக மொழியாக மாற்றினால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது.

9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அப்போது, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக மாற்றும் வகையில், கமிட்டியின் 11வது வால்யூம் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக மாற்றுங்கள் என்று கூறிய அடுத்த வாரமே, அமித்ஷாவின் கருத்திற்கு நேர் எதிரான ஒரு கருத்தை அதாவது, நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது.

மாநில மொழியா உள்ளூர் மொழியா?:

நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் இருந்தே ஒலித்த குரல் தான். பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடும் உரிமையைப் பற்றி பேசி உள்ளார்கள். இதன் பின்னணியில் பார்த்தால், ஏற்கனவே இருந்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்துவோம் என்கிறார். மாநில மொழிகள் என்று சொல்லாமல் உள்ளூர் மொழிகள் என்று பிரதமர் மோடி சொல்வது ஏன் என்ற கேள்வி தான் அடிப்படையாக வருகிறது. தேசிய கல்விக்கொள்கையே மாநில மொழிகளுக்கு ஆபத்தானது, சமஸ்கிருதம், இந்திக்கு ஆதரவானது தான் என்ற விமர்சனம் எழுந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும் போது, தேசிய கல்விக் கொள்கையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் மோடி, அதற்கு நேர் எதிரான உள்ளூர் மொழிகளின் ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை ஆராய வேண்டி உள்ளது. அதாவது, பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களின் மொழிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான் அது.

பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவின் மொழி கொள்கை:

பாஜக ஆட்சி செய்யும் திரிபுரா மாநிலத்தில் மும்மொழி கல்விக் கொள்கையில் ஒரு மொழி கூட மாநில மொழியில் கிடையாது. பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், உள்ளூர் மொழி கோக்போரக் மொழியில் அடிப்படைக் கல்வியை சொல்லிக்கொடுப்பது இல்லை. திரிபுராவில், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், வங்காளம், இந்தி, ஆங்கிலம் தான் பயிற்றுவிக்கப்படுகிறது. திரிபுராவில் பள்ளிகளில் அடிப்படை கல்வியை கூட கோக்போரக் மொழியில் கற்றுக்கொடுக்காமல் திரிபுரா நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதின் உண்மை தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இதே போல, உத்தரப்பிரதேசத்தில் உள்ளூர் மொழிகளான அவதி, போஜ்புரி, மைத்திரி உள்ளிட்ட மொழிகளில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுவது இல்லை. இதே நிலை தான், மத்தியப்பிரதேசத்திலும் உள்ளது. மத்தியப்பிரதேசத்தில், புந்தேலி மொழி பள்ளியின் தொடக்க நிலையில் கூட கற்பிப்பது இல்லை. பாஜக கூட்டணி செய்யும் அஸ்ஸாமில் கூட போடோ, ராஜ்பான்ஷி போன்ற உள்ளூர் மொழிகள் ஆரம்ப கல்வியை கூட கற்பதில்லை. இது தான் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் மொழிகளின் நிலை. ஆனால், மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய முரண்பாடாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு ஒரு வகையில் இருக்க அதற்கு நேர் எதிராக பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதையும் கவனப்படுத்த வேண்டி உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சில் மற்றொரு விஷயத்தையும் கூறினார். அதாவது, வடகிழக்கு மாநிலங்களில் 22,00க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை இந்திக்கு மாற்றியுள்ன.

அங்குள்ள 8 மாநிலங்களும் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க ஒப்புக்கொண்டன என்று கூறினார். ஒருபுறம், வடகிழக்கு மாநிலங்களிலும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இந்தியை கட்டாயமாக்கிக்கொண்டே மற்றொருபுறத்தில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் என்ற பிரதமர் மோடியின் பேச்சு முற்றிலும் முரண்பாடானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.