10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 31ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்வறையில் முகக்கவசம் அணிவதா? வேண்டாமா? என்று தொடர்ச்சியாக எழும் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே தேர்வுகள் நடைபெறும் எனவும், தனி மனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் முகக்கவசம் அணிந்தே தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்துள்ளது. 

ஒரு தேர்வறையில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுத உள்ளதாகவும், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் இல்லை என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.






