இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. 3வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
இன்றைய சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் முதலமைச்சராக இருந்த போதும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் தமிழ்நாட்டிற்கு நீட் வரவில்லை. யாருடைய ஆட்சிக் காலத்தில் நீட் நுழைந்தது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றும் கூறினார். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எங்கள் ஆட்சியில் நீட் தேர்வை எதிர்த்து வந்ததாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். மேலும், நீட்டை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும், அதிமுக ஆட்சியிலும் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிமுக அனுப்பிய தீர்மானம் குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை சட்டப்பேரவையில் ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ’நாங்கள் கூட்டணியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வை வரவிடவில்லை. இதை புரிந்து கொண்டிருந்தால் இவ்வளவு விவாதமே தேவையில்லை’ என்று தெரிவித்தார்.








