புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வந்து சேர வேண்டிய 40 டி.எம்.சி. அளவு காவிரி நீர் தமிழகத்திற்கு வந்து சேராததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையும், பல பகுதிகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுஜனங்களும் விலங்கினங்களும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகும் அவலங்களும் உருவாகியுள்ளன.
நமது உரிமை மறுக்கப்படும் பொழுது உடனடியாக காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக, கர்நாடக முதலமைச்சருடன் நேரடிப் பேச்சுவார்த்தை, பிரதமருக்குக் கடிதம் என இன்றைய அரசு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டு கொண்ட கர்நாடக அரசு, தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் முயற்சியாக மேகதாது அணையை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறது. அதற்கு ஒப்புதல் அளிப்பது போல, ’காவிரியின் மீது அணை கட்டத் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறத் தேவையில்லை’ என்று மத்திய நீர்வள இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று 3.5 டி.எம்.சி. நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தும், “ஒரு சொட்டு நீர் கூட திறந்து விட முடியாது; காவிரி ஒழுங்காற்றுக்குழுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம்” என கர்நாடகத் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் அதுபோன்ற ஒரு நிலையை உருவாக்கும் பொருட்டும், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், தேனி மாவட்டம் மேகமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக வாழும் மலைவாழ் மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதைத் தடுத்து, அவர்களுக்கு 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி வாழ்வுரிமையை நிலைநாட்டவும்;
புதிய தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை – தி நகர், ஹோட்டல் அக்கார்ட் மெட்ரோபாலிட்டனில் ”தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த அவசர அவசிய நிலையைக் கருத்தில் கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




