டாஸ்மாக் முறைகேடு : செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு…!

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழ் நாட்டில் இன்று காலை முதல் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேட்டின் மூலம் மாநில அரசுக்கு சுமார் ரூ.3,600 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜியும் இரண்டாவது குற்றவாளியாக ஐஏஎஸ் அதிகாரி விசாகனும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான எப்.ஐ.ஆர்-ல் பார் ஓனர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.17.27 கோடி வரை முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கான டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.