கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களுக்கு 3,390 தனி நபர்கள் பெயர்களில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் சுமார் 3,085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பத்திர பதிவுக்கான விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் அரசாணையால் கோயில் நிலங்களை பட்டா மாறுதல் தனிநபர் பத்திரப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அரசாணையை ரத்து செய்தும், அதுவரை பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பின் பதில் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலைத்துறையின் ஆணையாளர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மொத்தம் 3701 சர்வே எண்களுக்கு பத்திரப் பதிவு செய்வதற்கான தடை ரத்து செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், எந்த விதிமுறை மீறலும் இல்லை. தமிழக அரசின் சட்டத்திற்கு உட்பட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்ட்டது.
இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.




