இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“இந்திய குடியரசுத் தலைவர் பதவி தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்படுகிறது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 29ஆம் தேதியும், ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், தேவைப்பட்டால், ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என,” தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி அன்று முடிவடைகிறது, மேலும் அரசியலமைப்பின் 62 வது பிரிவின்படி, பதவிக் காலம் முடிவடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே நடத்தி முடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உட்பட அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.இதில், சட்ட மேலவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் அல்ல.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க துணை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும், கேரளாவின் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களின் வெங்கய்ய நாயுடு தமது ஆர்எஸ்எஸ் லாபி மூலம் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவிற்கும் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் திமுக உள்ளிட்ட சில எதிர்கட்சிகளும் தங்களை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக வெங்கய்ய நாயுடு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. சென்னையில் ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு திமுகவிற்கும், அவருக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தினார். இப்படி பல வகையில் தாம் ஒரு பொது வேட்பாளராக இருப்பேன் என்பதை அக்கட்சியின் தலைமைக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டு வருகிறார் வெங்கய்யா நாயுடு.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை பொறுத்தவரை, நபிகளை பாஜக செய்திதொடர்பாளர்கள் இழிவுப்படுத்தி பேசியதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தபோது, மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவாக இவர் ஊடகங்களில் பேசினார். மேலும், காஷ்மீர் போன்ற விவகாரங்களில் இதுவரை வாய் திறக்காதவர்கள், இப்போது மட்டும் பேசுவது சரியல்ல. பாஜக தலைமையிலான மத்திய அரசு அனைத்து மதங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் மதிக்கும் கட்சி என பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு தனது விசுவாசத்தை காட்டினார்.
இப்போது இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவிற்கு எதிரான மனநிலை நிலவுவதால்,அதனை சரி செய்யும் விதமாகவும் ஆரிப் முகமது கானை களமிறக்குவது குறித்து பாஜக தேசிய தலைமையும் சிந்தித்து வருதவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுபான்மையினருக்கு உரிய மரியாதையை இந்திய அரசு கொடுத்து வருவதாக சர்வதேச அரங்கில் காட்டிக்கொள்ள இவர் சிறந்த தேர்வாக இருப்பார் என கூறப்படுகிறது.
எதிர்கட்சிகள் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கு அடித்தளமாக இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் ஒரு மித்த வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சரத் பவாரை நிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் சரத்பவாரை நிறுத்தினால் எதிர்கட்சிகள் அனைவரையும் ஒன்றிணைப்பது எளிதாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி கருதுவதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி









