அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் போர்ப்படை தளபதியாக விளங்கி வரும் மனோஜ் பாண்டியன் யார் ? எல்லோரும் ஓபிஎஸ்யை விட்டு விலகி வரும் சூழலில் இவர் மட்டும் அவருடன் இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு பதில் தருகிறது இந்த ரிப்போர்ட்.
மனோஜ் மறைந்த சபாநாயகர் பி எச் பாண்டியனின் மகன் ஆவார். இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டான்சி உள்ளிட்ட வழக்குகளை கையாண்ட வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் தேர்வானார். தற்போது அதிமுக சார்பில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபோன்றவை நம் அனைவருக்கும் தெரிந்த தகவல். தெரியாத தகவல்கள் என்ன என்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசியபோது, பி.எச் பாண்டியன் குடும்பம் என்றாலே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்தமான குடும்பமாகும். அதுவும் அவர் உயிருடன் இருந்த காலத்தில் சசிகலாவை எதிர்த்து யாரும் பேச முடியாத காலத்திலும், சசிகலாவின் தவறுகளை துணிச்சலாக ஜெயலிதாவின் காதுகளுக்கு எடுத்து சென்றவர் மனோஜ் பாண்டியனின் தந்தை பி.எச்.பாண்டியன் என அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஜெயலலிதா மறைந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதே சசிகலாவால்தான் என நேரடியாக குற்றம்சாட்டினார் மனோஜ் பாண்டியன். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர்தான் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். அந்த காலகட்டத்தில்தான் ஓபிஎஸிற்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. சசிகலாவை முதலமைச்சராக வேண்டும் என ஜெயலலிதாவின் மறைவின்போது பல்வேறு கருத்துகள் எழுந்தபோது, மனோஜ் பாண்டியன் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
அது, ‘சசிகலா அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்ற நிலையில் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசினார், அதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். என்னிடம் பேசிய ஜெயலலிதா பெரும் கூட்டம் எனக்கு எதிராக சதிசெய்கிறது என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார்கள் என்றார்.
இதனையடுத்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினார். அதற்கு பின்னர் முக்கியமான பணிகளை எங்களிடம் வழங்கினார் அவர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம், ‘ என்றார் மனோஜ் பாண்டியன்.
மேலும் அவர் கூறியதாதவது, சில மாதங்கள் கழித்து மன்னிப்பு கோரி சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வந்தார். அப்போது நாங்கள் வருத்தம் அடைந்தோம் அப்போது ஜெயலலிதா எங்களில் 5 பேரை மாடிக்கு அழைத்தார். ஒவ்வொருவரையாக பார்த்த போது, சசிகலா குடும்பத்தினரை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்று உறுதியளித்தார் ‘ எனக் கூறினார். ஜெயலலிதா மறைந்த காலகட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றார். கட்சியின் விதிகளை மாற்ற முடியாது. கட்சியின் பொதுச்செயலாளரை கட்சியின் தொண்டர்கள்தான் தேர்வு செய்யவேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கூறினார்.
இப்படி அதிமுகவில் பல்வேறு அதிரடிகளுக்கு சொந்தகாரரான மனோஜ் பாண்டியன்தான் இன்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகவும் ஆதரவாக செயல்படுகிறார். நீதிமன்றத்தை நாடினால் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தாங்களை நீக்குவதை தடுக்க முடியும் என ஓபிஎஸிற்கு ஆலோசனை வழங்கியது இவர் என ஓபிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக இவரது உடன் பிறந்த சகோதரர் அரவிந்த் பாண்டியனை நீதிமன்றத்தை வழக்கு தொடருமாறு கேட்டுக் கொண்டார். அந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில் ஏற்கனவே தீர்மானக்குழு ஓபிஎஸிற்கு அனுப்பியுள்ள 23 தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது உத்தரவிட்டுள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் முக்கிய சட்ட நுணுக்கங்களை எடுத்து கொடுத்து உதவியர் மனோஜ் பாண்டியன் என்பதால் அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என ஒட்டு மொத்த அதிமுகவும் அவரையே உன்னிப்பாக கவனித்து வருகிறது. தன்னை முன்னிலைப்படுத்தாமல் ஓபிஎஸை மட்டுமே அவர் முன்னிலை படுத்திவருவதால் ஓபிஎஸிற்கு சசிகலா பின்னால் இருந்து இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையில்லை என பன்னீர்செல்வம் தரப்பு கூறி வருகிறது. இவை எல்லாவற்றிக்கும் விடை என்பது நீதிமன்றம் மூலமே கிடைக்கும் என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
இராமானுஜம்.கி