தமிழக கோயில்களில் இருந்து களவாடப்பட்டு 60 சிலைகளும் கலை பொருட்களும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக இருக்கூடிய இந்த பொக்கிஷங்கள் எப்போது மீண்டு வரப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். கடத்தப்பட்ட 60 சிலைகள் எந்தெந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? எந்தெந்த கோயில்களின சிலைகள் களவாடப்பட்டது? என்பது குறித்த எக்ஸ்குளுசிவ் தகவல்கள் நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்துள்ளது. அதுகுறித்த விரிவாக பார்க்கலாம். 
# செங்கல்பட்டு மாவட்டம் சிவன்கூடல் கிராமத்தில் உள்ள சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சோமஸ்கந்தர் உலோக சிலை, சம்பந்தர், ராமானுஜர், கணேசா, அனுமன் மற்றும் கருடா, புத்தா, ஆகிய ஐம்பொன் சிலைககள், தங்க கவசங்கள், ஆயுதம் ஏந்திய விஷ்ணு கற்சிலை, சுப்பிரமணியன், நந்தி, பீஷ்னா, அய்யனார் ஆகிய கற்சிலைகள், மரத்தால் ஆன மயில் சிலை ஆகிய 15 புராதன பொருட்கள் சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 
# விழுப்புரம் மாவட்டம் வீரசோழப் புரத்தில் உள்ள நரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திரிபுரந்தகர் உலோக சிலை, திரிபுரசுந்தரி உலோக சிலை, வீணதாரா உலோக சிலை, நடராஜர் உலோக சிலை, சுந்தரர் சிலை, பறவை நாச்சியார் உலோக சிலை ஆகியவை அமெரிக்கா ஒகியோ, நியூயார்க் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
# அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பார்வதிஅம்மன் உலோக சிலை, அஷ்திர தேவர் உலோக சிலை, சிவகாமி அம்மன் உலோக சிலை, உமா பார்வதி உலோக சிலை, மயில் உலோக சிலை. இந்த அமெரிக்கா புளோரிடா மகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
# திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆலத்தூர் கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீவிஷ்ணு உலோக சிலை, ஸ்ரீதேவி உலோக சிலை, பூதேவி உலோக சிலை ஆகிய 3 சிலைகளும், அதே கிராமத்தில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நரசிம்ம கணேசா, கிருஷ்ணா, சம்பந்தர், சோமஸ்கந்தர், விஷ்ணு உலோக சிலைகள், அமெரிக்கா லாஸ்ஏஞ்சல்ஸ், கான்சாஸ், கலிபோர்னியா, மினசோட்டா, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
# நாகை மாவட்டம் கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான செம்பியன் மாதேவி உலோக சிலை, வாஷிங்டன் மாகாணத்தின் அருங்காட்சியகத்தில் உள்ளது. செம்பியன் மாதேவி சிலை தமிழகத்தின் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளம் என்று தொல்லியல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். # தஞ்சை சரஸ்வதி மகாலில் இருந்து புராதன பைபிள் திருடப்பட்டு லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
# தஞ்சை சரஸ்வதி மகாலில் வைக்கப்பட்டிருந்த மகராஜா சரபோஜியின் பிரசித்தி பெற்ற ஓவியம் திருடப்பட்டு அமெரிக்கா மாசசூசெட்ஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
# நாகை மாவட்டம் சாயாவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான பத்ரகாளி, கார்த்திக்கேயன், நந்தி ஆகிய சிலைகள் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
# மயிலாடுதுறை அனந்த மங்கலம் கிராமத்தில் உள்ள ராஜகோபால பெருமாள் கோயிலுக்கு சொந்தமான அனுமன் உலோக சிலை சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
# கும்பகோணத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட நடன சம்பந்தர் உலோக சிலை லண்டனில் உள்ளது. 
# நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சி வன்னியப்ப திருக்கோவிலுக்கு சொந்தமான காளியம்மன் நியூயார்க் நகரில் உள்ளது.
# தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான காலிங்கநர்த்தனர் உலோக சிலை, விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகள் அமெரிக்காவில் சான்பிரான்ஸ்கோ, டெக்சாஸ், புளோரிடா ஆகிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
# நாகை மாவட்டம் திருக்குவளை திருமுகத்தலை பன் னக பரமஸ்வரி கோயிலுக்கு சொந்தமான விநாயகர் உலோக சிலை, தேவி அம்மன் உலோக சிலை, கலிபோர்னியா மாகாணத்தில் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
# கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலம் ஆபத்சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நடனமாடும் சம்பந்தர் கற்சிலை திருடப்பட்டு அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ளது.
# அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தன் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோயிலில் சிவகாம சுந்தரி உலோக சிலை, தீபலட்சுமி உலோக சிலை திருடப்பட்டு இந்த அமெரிக்கா புளோரிடா மகாணத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
# திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேணுகோபால் சாமி கோயிலுக்கு சொந்தமான பார்வதி உலோக சிலை அமெரிக்கா நியூயார்க் நகரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
# கும்பகோணம் சிவகுருநாத சுவாமி கோயில் சோமஸ்கந்தர் உலோக சிலை, தானி அம்மன் உலோக சிலை, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. 
# தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் உள்ள வேதபுரிஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நடராஜர் உலோக சிலை நியூயார்க நகரில் உள்ளது.
# அரியலூர் மாவட்டம் வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான அனுமன் உலோக சிலை. ஆஸ்திரேலியோ இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
# தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான கலச மகரமூர்த்தி அமெரிக்கா மினசோட்டா அருங்காட்சியகத்தில் உள்ளது.
# கும்பகோணத்தில் உள்ள சுந்தரபெருமாள் கோயிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோக சிலை லண்டன் ஆக்ஸபோர்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
# நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வன்னியப்ப திருக்கோயிலில் இருந்த வீரபத்திரன் உலோக சிலை லண்டனில் இருக்கிறது. 
இந்த கோவில் சிலைகள் அனைத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வர தமிழக காவல்துறை டிஜபி சைலேந்திரபாபு “தனிக்குழு” ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழகத்திற்கு தமிழக பொக்கிஷங்களை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– நியூஸ் 7 தமிழ் செய்திகளுக்காக குற்றப்பிரிவு தலைமைச் செய்தியாளர் சுப்பிரமணியன்








