தமிழகத்தில் உள்ள ஐம்பொன் சிலைகள் அதிக அளவில் லண்டனிற்கு
கடத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் கடந்த 1985ஆம் ஆண்டு 11ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர்
மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல்
போயுள்ளன. இதுதொடர்பாக 1986ஆம் ஆண்டு சிலைகளை மீட்க முடியாமல் உள்ளூர் போலீசாரால் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, சிலையை யார் கடத்தியது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட சிலையை கடத்தியது யார் என்பது குறித்து நியூயார்க் மியூசியத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஐம்பொன் சிலைகள் அதிகளவில் லண்டனிற்கும், அடுத்தபடியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இன்னும் 40-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட
வேண்டியுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலைகள் காணாமல் போன வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. சிலை கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட சுபாஷ் கபூர் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டு காணமல்போன இந்த இரு சிலைகள் குறித்த வழக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் 1986ஆம் ஆண்டு கைவிட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலையின் புகைப்படத்தை பார்த்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு சிலை மீட்கப்பட்டது. கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாக்க சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்திப் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
-ம.பவித்ரா