பணம் கொடுப்பவர்களுக்காக வாக்களிக்க வேண்டும், என்ற எண்ணத்தை மாற்றி, நம் உரிமையின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும், என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி உழவர் கரை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக உழவர் கரை, ஜவகர் நகர், மூலகுளம் ஆகிய பகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி என இரு மாநில மக்களின் நலனுக்காக, திமுக – காங்கிரசோடு இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும், எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்காக வாக்களிக்க வேண்டும், என்ற எண்ணத்தை மாற்றி, நம் உரிமையின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.







