பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கீரனூர் பேருந்து நிலையம் எதிரே பெண் ஒருவர் 24மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும், அதிகாலை 3 மணிக்கு சென்றாலும் இவரிடம் மதுபானம் கிடைக்குமாம். இதனால் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு, இவரிடம் மது வாங்கி குடித்து வருவதாகவும், பலரது குடும்பங்கள் பாதிக்கப் பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல காடுகளுக்குள் மதுவிற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கல் இறக்கும் நபர்களை தீவிரமாக தேடி அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும பொதுமக்கள் வாழும் பகுதியில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து மதுவிற்பனை செய்யும் செயல் தெரியாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த பெண் மதுவிற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பெண்ணிடம் ஒருவர் மதுவாங்குவதும், அவருடன் பள்ளி சீருடையில் சிறுவன் ஒருவன் உடனிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








