நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சில சுவாரஸ்ய நிகழ்வுகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றியைக் கொண்டாடும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.

வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றியைக் கொண்டாடும் வகையில் வேட்பாளர் கங்காவை, திருநர்கள் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சு.சுபாகரன் 401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். உசிலம்பட்டியில் முதல் இளம் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக 12 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் நகரமன்ற தலைவர் பதவிக்கு பழனியம்மாள் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த 2007 முதல் 2011 வரை நகர்மன்றத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 13-வது வார்டில் திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் சம வாக்குகள் பெற்றதால் திருச்செங்கோடு நகராட்சி தேர்தல் அலுவலர் கணேசன் இரண்டு பேரின் பெயர்களையும் ஒரு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். இதில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சினேகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 3-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். இதைக் கேட்டதும் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக. வேட்பாளர் கார்த்திக் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல, நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனுவேலுவும், அதிமுக வேட்பாளர் உஷாவும் 266 வாக்குகள் பெற்று சமநிலை பெற்றனர்.
இதையடுத்து குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி 7-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இப்ராகிம்ஷா ஒரு வாக்கு கூட பெறவில்லை. அதே வார்டில் 5-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்தும் ஒரு வாக்கு கூட பெறாதது  திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே வார்டில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் க.தர்மராஜ் என்பவரும் 1 வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும், கன்னியாகுமரி கொல்லங்கோடு நகராட்சி 11 வார்டில் போட்டியிட்ட கம்யூ. கட்சியை சேர்ந்த ஃபெரோஸ் கான் என்ற மாற்றுத்திறனாளி வேட்பாளர் 303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய  News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.