எடப்பாடி பழனிசாமியின் குறி அர்ஜுனன் கூறி … “நாங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி திமுக” – ஆர்.பி.உதயகுமார்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்ததால் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையில் ஜனவரி 20ஆம் தேதி 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை முதல் கூட்டத்துடன் தொடங்க இருக்கிறது. திமுக அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும், முழுமையான பட்ஜெட்டை கொடுக்க முடியாது. 2026 – 27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஜனநாயக அரசாக மக்களாட்சியின் அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சமர்ப்பிக்கப்படும் என்பது தான் இந்த புத்தாண்டின் மகிழ்ச்சியான செய்தி.

அதிமுகவை தவிர இந்த செயல்படாத திமுக அரசை யாரும் கண்டிப்பதில்லை. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி, உயர்வு பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், குப்பை வரி, பால் விலை உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு இதுவரை காணப்படாத அளவு கேள்விக்குறியாகி உள்ளது. போதை பொருள் வீட்டிற்குள் நுழையும் அளவிற்கு அதிகரித்துள்ளது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் சவால் விடுகிறார். எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிக்காமல் அவருக்கு தூக்கம் வருவதில்லை. அதிமுக தேர்தல் களத்தில் முந்திக் கொண்டிருக்கிறது. மக்களின் வரவேற்பின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தால், அச்சத்தில் சவால் விடுகிறார்.

அதிகாரத்தை வைத்து தேர்தலை நடத்தி வென்று விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். சவால் விடுகிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடே குப்பை நகராக மாறி வருகிறது. தலை குனிந்து இருப்பதை நாம் அறிவோம். இந்த நிலையை அறிந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிப்பார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு கிடையாது.

தேர்தல் ஜுரம் வந்ததால் மடிக்கணினி கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். உழவர் உதவி மையம் அறிவித்திருக்கிறார். இவை அனைத்தும் தேர்தல் ஜுரத்தால் அறிவிக்கக்கூடிய திட்டம். மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டமல்ல. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் வரலாற்று வாய்ப்பை எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் வழங்குவார்கள் என்பது தான் 2026 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சியான நற்செய்தியாக அமையும்.

தேர்தல் களத்தில் நின்று வென்று அனுபவம் பெற்று களத்திற்கு வந்தவர்கள். 2026 சட்டமன்றத் தேர்தல்தான் அதற்கு பதில் சொல்லும். கூட்டணி குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரத்தை பொதுக்குழு, செயற்குழு ஒப்படைத்துள்ளது. 175 தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ளோம். 12000 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக பயணம் செய்துள்ளார். எந்த கட்சித் தலைவர் ஒரு கோடி மக்களை சந்தித்திருக்கிறார்? தேர்தல்களில் அதிமுக முந்தி சென்று கொண்டிருக்கிறது.

எங்களைப் போன்று திமுகவை கடுமையாக விமர்சிக்க யாருமே இல்லை. ஸ்டாலினை எதிர்ப்பதுதான் எங்கள் இலக்கு, எடப்பாடி பழனிசாமி குறி அர்ஜுனன் குறி, நாங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி திமுக, தமிழக மக்களுக்கு விரோதியாக இருப்பது திமுக . 10,15 சதவிகித வாக்குறுதிகள் மட்டுமே திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டத்திற்கான வியூகம் அளித்து தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை பெற்ற கூட்டணியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.